டந்த சில ஆண்டுகளாக அடங்கியிருந்த மத்திய அரசின் ஜவுளி அமலாக்கப் பிரிவான என்ஃபோர்ஸ்மென்ட் துறையின் அதிகாரிகள், தற்போது ஜவுளி நெசவுத் தொழிலுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருப்பது நெசவாளர்களிடையே கடும் கொதிப்பைக் கிளப்பியிருக்கிறது.

thari

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சுமார் 5,000 விசைத்தறிகள், சிறு குறு விசைத்தறிக்கூடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25,000 நெசவுத் தொழிலாளர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த விசைத்தறிகளில், 60 கவுன்ட்ஸ் நைஸ் ரக சேலைகள் நெசவு செய்யப்பட்டு தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. இதே விசைத்தறித் தொழில்கள், தமிழகத்தின் ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், சேலம், கரூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நிறைந்துள்ளன.

அண்மைக்காலமாக, லாக்டவுன் மற்றும் மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையால் நைஸ் ரக நூல்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டதால், உள்நாட்டில் ஏற்பட்ட கடுமையான நூல் விலையேற்றம் காரணமாக தற்போது சங்கரன்கோவில் நகரில் இத்தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அதோடு நெசவுத் தொழிலின் நேரம் குறைக்கப்பட்டதால் இந்த நெசவாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை நெருக்கடிகளோடு என்ஃபோர்ஸ்மென்ட் அதிகாரிகளின் நெருக்கடியும் பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Advertisment

கடந்த, ஜூலை 14 அன்று, மத்திய அரசின் தென்மண்டலமான மதுரையைச் சேர்ந்த ஜவுளி அமலாக்கத் துறையின் என்ஃபோர்ஸ்மென்ட் அதிகாரி மனோகரன் தலைமையில் 6 பேர் கொண்ட டீம் ஒன்று சங்கரன்கோவிலுக்கு வந்திருக்கிறது. அவர்கள் நேராக நகரின் வடபுறமுள்ள முருகன் என்பவரின் விசைத்தறி செட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அதிகாரிகளைக் கண்ட அங்குள்ள நெசவாளர்கள் உடனே தறிகளின் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறார்கள். "நான் வந்ததும் தறிகள ஏன் நிப்பாட்டுனீங்க. இதோட ஓனர் எங்க?" என்று மனோகரன் மிரட்டலாகக் கேட்டி ருக்கிறார். அங்கு வந்த முருகனிடம், "இதுபோன்ற சேலை ரகங்களை விசைத்தறிகளில் நெசவு செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அது கிரிமினல் குற்றம். உங்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டியிருக்கும்'' என்றவர், அவரின் தறி செட் முகவரி, இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களைக் குறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார். அதற்குள் அதிகாரிகள் வந்தது பற்றிய விபரம் பிற பகுதிகளுக்கும் நொடியில் பரவியிருக் கிறது.

அடுத்ததாக பாரதியார் தெருவி லிருக்கும் ராம்குமார் என்பவரின் தறி செட்டிற்குள் அதிகாரிகளின் டீம் நுழைந்ததும், பதறிப் போன ராம்குமார் தறிகளை நிறுத்தியிருக்கிறார். அங்கு நடந்தது பற்றி ராம்குமார், "அதிகாரிகள் வந்ததும், இந்த ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக் கூடாது என்றதும், நான், இந்தத் தொழில்தான் எங்களின் பிழைப்பே. இதைத்தான் உற்பத்தி செய்து வருகிறோம். இத்தொழிலைக் கள்ளத்தனமாகச் செய்யவில்லைன்னு சொன்னதும், அந்த அதிகாரி எனது விலாசம் மற்றும் இந்த நூல்கள் நெசவு நெய்வதற்காக எந்த கம்பெனியிலிருந்து பெறப்படுகிறது என்கிற விபரத்தையும் வாங்கிக்கொண்டு போயிருக்கிறார். என்ன செய்யப் போறாரோன்னு எனக்கு கதி கலங்குது" என்றார்.

thari

Advertisment

இதையடுத்து, பாரதியார் 8-ம் தெருவிலுள்ள வெங்கட் என்பவரின் தறி செட்டிற்குள் என்ஃபோர்ஸ் மென்ட் நுழைந்ததும் தகவலறிந்து செட்டிற்கு வெளியே நெசவாளர்கள் கூட்டம் திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டுள்ளனர். நகர் முழுக்க தறிகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டு பரபரப்பான சூழலானது. அதிகாரிகளோடு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தகவலறிந்து, நகரின் தி.மு.க. செயலாளரான சங்கரன் ஸ்பாட்டிற்கு வந்து அதிகாரி மனோகரனிடம் பேசியிருக்கிறார். இந்த ரகங்கள் விசைத்தறிகளில் நெசவு செய்யக்கூடாது. செயற்கை இழையான பாலிஸ்டர் நூல்களைக் கொண்ட துணி ரகமே தயாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னவரிடம், "சார், நீங்க சொன்ன ரகம் போட்டால் பாலிஸ்டர் துணிகளை தண்ணீரில் நனைத்த பிறகு முட்டுக்கால் அளவிற்கு சுருங்கி விடும். அதுபோன்ற ரகங்களை விற்கவும் முடியாது. விற்காத துணி ரகங்களை உற்பத்தி செய்ய முடியுமா? எங்கள் நிலைமையை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள்'' என்றிருக்கிறார் சங்கரன்.

"அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. உற்பத்தி செய்யக்கூடாதுனா செய்யக்கூடாது' என்று அதிகாரி சொல்ல, தொடர்ந்து நெசவாளர்களின் கூட்டம் திரள, அங்கு பதற்றச்சூழல் ஏற்படவே, மனோகரின் டீம் உடனே கிளம்பத் தயாரானார்கள். அதுசமயம் நம்மை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டு, "சார், இங்குள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரமே இதுதான். ஸ்பாட்டிற்கு வந்து நிலைமைகளைப் பார்க்கும் நீங்கள்தான், அவர்களின் குறையை மேலதிகாரிகளுக்குச் சொல்லி நிலவரத்தைப் புரியவைக்க வேண்டும்'' என்றபோது, "எது வேண்டுமென்றாலும் இந்த விலாசத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்' என்று சென்னை டெக்ஸ்டைல் கமிசனரின் முகவரியை நகரச் செயலாளர் சங்கரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திடீரென்று வந்த மத்திய ஜவுளி அமலாக்கத் துறையின் அதிகாரிகளின் நெருக்கடியால் நிலைகுலைந்து போயிருக்கிறது நகரின் விசைத்தறி நெசவுத் தொழில்.